Pages

Wednesday 27 June 2012

தமிழ் ஊடகங்களின் சார்பு

தமிழ் ஊடகங்களின் சார்பு



பொதுவாக ஒவ்வொரு கட்சியும் ஒரு தொலைக்காட்சியோ ,தின பேப்பர் ,வார இதழ் போன்றவற்றை சொந்தமாக கொண்டு தங்கள் சார்ந்த கட்சியின் விஷயங்களை ,எதிர் தரப்பு மீது புகார் சொல்ல ,எதிர் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சியின் ஊழல்களை ,அத்துமீறல்களை எடுத்து சொல்ல பயன் படுத்தும்.அந்த ஒரு சார்பு ஊடகங்களில் உதாரணமாக கலைஞர் டி.வி ,ஜெயா டி.வி போன்றவற்றில் ஞாயமான ,சார்பற்ற செய்திகளை எதிர்பார்க்க முடியாது.ஆனால் இங்கு நான் சொல்ல விரும்புவது நடுநிலையான என்று சொல்லிக்கொண்டு ஒரு தரப்புக்கு மட்டும் ஜால்ரா அடிக்கும் இதழ்களை பற்றி.அதற்க்கு முன் ஒரு விஷயம் ,இதில் சன் நெட்வொர்க் சார்ந்த தினகரன்,சன் நியூஸ் போன்றவை அடிப்படையில் தி.மு.க. சார்பு என்றாலும் அவை மற்ற செய்திகளையும் சொல்லும்.தேர்தல் நேரம் என்று வரும் போது முழுக்க தி.மு.க. பக்கம் சாய்ந்து விடும்.அதிலும் ஸ்டாலின் ,அழகிரி பற்றி செய்திகளை பாரபட்சத்துடன் சொல்லும்.மற்ற நேரங்களில் தங்கள் வியாபாரம் சிறக்க முழுக்க வணிக  நோக்கத்தோடு செயல்படும்.இனி மற்றவை பற்றி 
தினமலர்
அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க. சார்பு என்று  சொல்வது தவறு.அந்த கட்சிகளுக்கு அடிமை என்று கூட சொல்லலாம். மற்ற கட்சிகளை ஜென்ம பகை என்று நினைக்கும் பேப்பர்.அதிலும் கடவுள் மறுப்பு கட்சிகள் என்றால் அவ்வளவுதான்.மேலும் பிராமணர்கள்,ஆன்மீக தரப்பு ஆளுகைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் பேப்பர்.தினசரி கலைஞர் ,காங்கிரஸ் ,ராமதாஸ்,வைகோ ,இடது சாரிகள் என்று அவர்கள் கட்சிக்குள் குழப்பம் செய்வதும்,ஜெயலலிதா என்னமோ உலக புரட்சியாளர் போல் பிம்பம் ஏற்படுத்தவும் முயலும்.மேலும் நித்யானந்தாவை காய்ச்சி எடுக்கும் தினமலர் காஞ்சி சங்கரச்சர்யார் என்றால் பட்டும் படாமலும் இருக்கும்.என்னதான் ஜெயலலிதா மூக்கு உடைபட்டாலும் இது அடிக்கும் சோம்பு சத்தம் அதிகம் கேட்கும்.ஈழ தமிழர்களுக்கும் ,அவர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இவர்களுக்கு பிடிக்காது.கூடங்குளம் மக்களுக்கும் எதிரானது.சமீபத்தில் சசிகலாவை ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டு துரத்திய பொது ஜெயலலிதா இனி மக்களுக்காக மட்டுமே,கட்சி களை  எடுக்க பட்டது என்று கொக்கரித்தது.ஆனால் ஜெயலலிதா சசிகலாவை திரும்பவும் அழைதுகொண்டபோது அவர்களுக்கு காது செவிடாகி விட்டது.ஆட்சிக்கு வந்தது முதல் சென்ற ஆட்சியில் இப்படி என்று சொல்லி முதல்வர் இதை மாற்றுவாரா என்று தினமும் பல செய்தி வரும்.ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருஷத்திற்கு மேல் ஆகியும் அப்படி எழுதிய விஷயங்கள் சரி செய்ய பட்டதா என்று கேட்கமாட்டார்கள்.இவர்கள் சினிமா காரர்களையும் விட்டு வைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பக்கம் முழுதும் நடிகைகளின் படங்களை போட்டு இந்த நடிகையுடன் படுக்க இவ்வளவு ரேட் என்று ஒரு அபத்தம்.திரை உலகம் முழுவதும் ரஜினி உட்பட பலர் இதை எதிர்த்தனர்.


தினத்தந்தி:
          யார் ஆளும் கட்சியோ அவர்களுக்கு சொம்பு அடிக்கும் பேப்பர்.அரசாங்கத்தின் மூலம் வரும் விளம்பர வருமானத்தை இழக்க விரும்பாத தினத்தந்தி இதே ஜெயலிலதா எதிர் கட்சியாக இருக்கும்போது அவர் கொடுக்கும் அறிக்கையை இரண்டு நாட்கள் போடாமல் வைத்திருந்த நாட்கள் எல்லாம் உண்டு.அதனால் தான் யாரையும் பகைத்து கொள்ள மனம் இல்லாமல் கள்ள காதல் ,உல்லாசம் என்று செய்தி போட பக்கம் அதிகம் ஒதிக்கி விட்டனர். 

தினமணி:
         இதன் தலைமை மாறும் போதெல்லாம் தன் சார்பை மாற்றிக்கொள்ளும் தினசரி இது.ஓரளவு கண்ணியமான விஷயங்களை படிக்க இதை நாடலாம்.ஆனால் சார்பற்றது என்று சொல்லிவிடமுடியாது.

குமுதம்:
           இதுவும் கிட்டத்தட்ட தினத்தந்தி போலதான்.ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு சார்பாக எழுதும்.ஆளுங்கட்சி இடைதேர்தலில் ஜெயிக்கும்  என்பது தெரிந்தது.இதற்க்கு போய் அம்மாவின் வெற்றி என்று பக்கத்தை வீணடிக்கும் கட்டுரைகள்.வார வாரம் ரஜினி,விஜய் ,அஜித் என்று முக்கிய நடிகர்கள் பற்றி உசுபேற்றும் கட்டுரைகள்.இவர்கள் போடும் கற்பனைகள் நடக்கவிட்டால் வாய் திறக்க மாட்டார்கள்.அப்படி ஒன்று இவர்கள் சொன்னது போல் நடந்து விட்டால் அவ்வளவுதான்.வானத்துக்கும் பூமிக்கும் துள்ளி குதிப்பார்கள்.ரஜினி பற்றி இவர்கள் இஷ்டத்திற்கும் எழுதி சம்பாதித்தது அளவில்லாதது.
விகடன் :
           இவர்கள் சீசன் பறவைகள்.அடிமைகள் சிக்கிவிட்டால் தீர்ந்தது.கலைஞரை பற்றி எழுதும் இவர்கள் மாறன்களை பற்றி அடக்கி வாசிப்பார்கள்.காரணம் விகடன் சன் டி.வி சீரியல்கள்.இப்போது ஜெயலலிதா ஆட்சி பற்றி மெல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் .பார்க்கலாம்.
நக்கீரன்:
        இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.கிட்ட தட்ட மூன்றாம் தர பத்திரிக்கை போல் செயல் படும்.கேட்டால் புலனாய்வு என்று பெயர்.அதிலும் கலைஞர் சார்பு.

முக்கிய பிரபலான பத்திரிகைகள் பற்றி மட்டும் பார்த்தோம்.இப்படி ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு சார்பு.இதில் நாம் நடுநிலையான செய்திகளை தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.இப்படி ஒரு நிலையில் பாவம் தான் தமிழன்.




Thursday 21 June 2012

The Devil's Double -- ஆங்கில பட விமர்சனம்


The Devil's Double -- ஆங்கில பட விமர்சனம் 


பிரபலமானவர்கள் குறிப்பாக உயிருக்கு ஆபத்து இருப்பவர்கள் ,தன்னை போலவே இருப்பவரை தன் "டூப்பாக" அதாவது போலியாக பொது இடங்களுக்கு அனுப்புவார்கள்.சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட போலிகள்  கூட உண்டு. சதாம் உசேன்,ஒசாமா பின் லேடன் போன்றவர்கள் ஏழு எட்டு போலிகளை தன்னை போலவே தயார் படுத்தி வைத்திருந்ததாக கேள்விபட்டிருக்கிறோம்.அப்படி ஒரு போலியின் கதை தான் இந்த படம்.இது உண்மை கதை என்று சொல்ல படுகிறது.சதாம் உசேனின் மகன் உதய் தன் தந்தைக்கு கொஞ்சமும் சளைக்காமல் கொடூர குணங்கள் கொண்டவன்.அவன் தன் உயிருக்கு தன்னால் பாதிக்க பட்டவர்களால் ஆபத்து என்று தெரிந்ததும் தனக்கு போலி ஒருவனை தேர்ந்தெடுக்கிறான்.அதன் பின் என்ன என்பதே படம்.


ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது மிகவும் கவனம் தேவை.எவற்றை சொல்ல வேண்டும் .எதை தவிர்க்க வேண்டும்.இந்த அளவுகோல் சரியில்லை என்றால் படம் இழுவை ஆகிவிடும்.இந்த படம் அந்த குறைகள் இல்லாமல் மிகுந்த நேர்த்தியோடு எடுக்க பட்டிருகிறது.படம் 1987 வருடம் இராக்கில் தொடங்குகிறது.ஈராக் படையில் இருக்கும் லதிப் என்பவன் ஈராக் இளவரசனும் சதாம் உசேனின் மகனும் ஆன உதயின் போலியாக நடிக்க அழைக்க படுகிறான்.காரணம் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.அப்போது எல்லோரும் இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக வகுப்பில் பேசப்பட்டதால் ,இவனை தேர்ந்தெடுக்கிறான் .முதலில்  மறுக்கும் லதிப் ,குடும்பத்தை காட்டி மிரட்டப்பட்டதும் ஒப்புகொள்கிறான்.இருவருக்கும் உள்ள மிக சில வேறுபாடுகளையும் டாக்டர்களை வைத்து சரி செய்கிறான்.உதய் தான் பயன் படுத்தும் எல்லாவற்றையும் லதிப் பயன் படுத்த அனுமதிக்கிறான்.மேலும் லதிப் போரில் இறந்துவிட்டதாக அவன் குடும்பத்தை நம்ப வைக்கிறான்.


உதயின் கொடூர குணங்களை வெறுக்கும் லதிப் வேறு வழியில்லாமல் தொடர்கிறான்.இதற்கிடையில் உதையின் காதலி லதிப் காதலி ஆகிறாள்.ஒரு கட்டத்தில் ஒரு 14 வயது பள்ளி சிறுமியை ஒரு பார்ட்டியில் பல பேர் முன்னிலையில் அவளை மானபங்க படுத்த முயற்சிக்கிறான்.தன் தந்தையின் நண்பர் வற்புறுத்தலால் அதை நிறுத்துகிறான்.இருந்தாலும் மறுநாள் அவன் ஆட்கள் அந்த பெண்ணின் இறந்த உடலை வீசிவிட்டு போகிறார்கள்.உதயாக நடிக்கும் லதிப் தன் படை வீரர்களை உற்சாக படுத்த அனுப்பபடுகிறான்.அங்கேயும் அவனை கொள்ள முயற்சி நடிக்கிறது.அதில் தனது விரலை இழக்கிறான் லதிப் .இதனால் கோபப்படுகிறான் உதய்.காரணம் லதிப் விரலை இழந்தால் இவனும் இழக்க வேண்டும்.இல்லாவிட்டால் இவன் வேறு அவன் வேறு என்று தெரிந்து விடும்.அவன் பிறந்த நாள் விழாவின் போது காதலியோடு தப்பிக்கிறான் லதிப் .காதலி தந்திரமாய் இவனை சிக்கவைக்க பார்க்கிறாள்.தப்பிக்கிறான்.


ஈராக் திரும்பும் லதிப் உதயை கொள்ள நேரம் பார்கிறான்.அவனால் பாதிக்க பட்ட சிலர் அவனுக்கு உதவுகிறார்கள்.வழக்கமாய் வீதிகளில் வந்து தனக்கு பிடித்த பெண்களை தூக்கி கொண்டு போய் கற்பழிக்கும் உதய் அன்று 1996 இல் லதீப்பால் ஆணுறுப்பில் சுடப்படுகிறான்.லதீப் தப்பிக்கிறான்.சுடப்படவன் இறக்கவில்லை.லதீபும் அகப்படவில்லை.


உண்மை சம்பவங்கள் என்று சொல்லப்படும் படத்தில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் அதிகம்.பிறந்த நாள் விழாவில் வந்த விருந்தினர்கள் அனைவரையும் நிர்வாணம் ஆக்குதல்,திருமணதிற்கு போய் அந்த மணபெண்ணையே கற்பழிப்பது இப்படி படம் முழுவதும்.அந்த நாடு மக்கள் இவனிடம் என்ன பாடு பட்டிருப்பார்கள் பாருங்கள்.நடுநடுவே சதாம் உசேன் வேறு வருகிறார்.

டிஸ்கி : தன்னை போலவே லதீபையும் மாற சொல்லும் உதய் முகம் ,தாடை மற்றும் பிற விஷயங்களில் என்ன மாற்றங்கள் என்று சொல்லிக்கொண்டே இருவரும் அருகருகே குளிக்கிறார்கள் .அப்போது எட்டி பார்க்கும் உதய் லதிபிடம் அவனின் ஆணுறுப்பை சில இன்ச் வெட்டிக்கொள்ள சொல்கிறான்.அதிர்ச்சியுற்று இதை யார் கண்டுபிடிக்க போகிறார்கள் என்று இவன் கேட்க ,அதற்க்கு பாக்தாத் பெண்கள் என் ஆணுறுப்பை பற்றி அறிவார்கள்.அதனால் அதன் அளவை தனது போல் குறைத்து கொள்ள வேண்டும் என்று சொல்வான்.இந்த ஒரு சீன் படத்தை பற்றி சொல்லிவிடும்.

Tuesday 19 June 2012

புதிய இயக்குனர்களா ? ஐயோ வேண்டாம் !

புதிய இயக்குனர்களா ? ஐயோ வேண்டாம் !

ஒரு நடிகர் எந்த நிலையில் உள்ள இயக்குனர்களின் படங்களில் நடிக்க விரும்புவார்.நடிக்க வரும் புதிதில்,யார் வாய்ப்பு குடுத்தாலும் நடிப்பார்.இது ஒரு ஹிட் படம் கொடுக்கும் வரை தான்.அதற்க்கு பின் படங்களை அவரது விருப்பம்.இந்த படத்தில் நடித்தவரின் அடுத்த படம் என்று மக்கள் ஒரு படத்தை பற்றி பேசும் வரை தான் இந்த நிலைமை .புதிய இயக்குனர் படங்களில் நடிப்பவர் யார்?.ஒரு நடிகர் கொஞ்சம் வளர்ந்த பின் பிரபலமான இயக்குனர்கள் படங்களில் மட்டுமே என்று முடிவெடுப்பதும் உண்டு.ரஜினிகாந்த் எந்த புதிய இயக்குனர் படத்தில் கடைசியாக நடித்தார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? ஒரு நிலைமை அடைந்ததும்  இனி புது இயக்குனர் படங்களில் நடிப்பதில்லை என்றும்,அந்த நேரத்து ஹிட் கூட்டணி அமைத்து படம் வெற்றி பெற்றால் போதும்.புதியவர்களுக்கு வாய்ப்பு  கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.இதில் அவர் ரசிகர்கள் வேறு ரஜினி படம் எப்படி இருந்தாலும் பாப்போம் என்று.அப்ப ஒரு புதிவருக்கு வாய்ப்பு தரலாமே.இதை அப்படியே கொஞ்சமும் மாறாமல் இப்போது சூர்யா தொடர்ந்து வருகிறார்.வரிசையாக ஹிட் கொடுப்பது இருந்தாலும்,ஒரு புதியவரை கதை பிடித்திருந்தால் கூடவாய்ப்பு தர  தயங்குகிறார்.அவர் கடைசியாக சிலுன்னு ஒரு காதல் படத்தில் கிருஷ்ணா என்பவருக்கு வாய்ப்பு தந்தார்.அதற்க்கு பின் யாருக்கும் இல்லை.விக்ரமும் அப்படியே.


இந்த விஷயத்தில் விஜய் ,அஜித் இருவரும் பரவாயில்லை.விஜய் ஆரம்பத்திலிருந்தே புதியவர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறார்.ஆரம்பத்தில் அதாவது அவரது ஹிட் படங்களான லவ் டுடே ,துள்ளாத மனமும் துள்ளும்,திருமலை ,திருப்பாச்சி போன்ற படங்கள் புதிய இயக்குனர்கள்  படங்களே.தான் சொல்வதை கேட்பார்கள் என்பதற்காக பெரும்பாலும் அவர்களுக்கு வாய்ப்பு தருவார். ஆனால் அவரது மார்கெட் சரிய காரணமும் அவர்களே .வேட்டைக்காரன்,அழகியதமிழ் மகன்,சச்சின்,கீதை,தமிழன்,ஷாஜகான்,பத்ரி,நிலாவே வா என்று இவர் வாய்ப்பு கொடுத்து ஊத்தி கொண்ட படங்களை சொல்லி கொண்டே போகலாம்.அவர் மட்டும் சூர்யா போல் பிரபல இயக்குனர்கள் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று முடிவெடுத்து இருந்தால் நிச்சயமாக அவருக்கு சரிவு இருந்திருக்காது.இப்போது அதை உணர்ந்து முருகதாஸ்,கௌதம் மேனன்,ராஜேஷ் என்று வரிசையாய் பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க உள்ளார்.

அஜித் படங்களில் வாலி,தீனா என்று கொஞ்சமே புதிய இயக்குனர்கள் படங்களில் வெற்றியை கண்டாலும்,முகவரி,சிடிசன் போன்ற படங்கள் எதிர்பார்த்தது போல் ஓடாததால் ,அவர் புதிவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை குறைத்து கொண்டார்.கொஞ்சம் இடைவேளைக்கு பின் கிரீடம்,ஆழ்வார் என்று முயற்சித்து பார்த்தார்.அவை கைவிட்டு விடவே ,பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.குறைந்த பட்சம் ஓரிரு படங்களாவது இயக்கி இருக்கிறார்களா என்று பார்த்தே வாய்ப்பு அளிக்கிறார்.



ஒரு நடிகர் தொடர்ந்து வெற்றி பெற்று பின் கொஞ்சம் வளர்ந்த பின் புதியவர்கள் குறிப்பாக திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்பளித்து பார்த்தார்.சில படங்கள் வெற்றி அடையவே ,பின் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு அவர்கள் படங்களில் மட்டுமே நடித்து பெரும்பாலும் தோல்வி கண்டு தன் மார்கெட்டை இழந்தார்.அவர் வேறு யாரும் இல்லை .நம் கேப்டன் விஜயகாந்த் தான்.கமல் வேறு பாதையில்  சென்று விட்ட பின் ரஜினிக்கு போட்டியாக அதிரடி மசாலா படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற்றுகொண்டிருந்த விஜயகாந்த்  புதிவர்களாலேயே தன் இடத்தை இழந்தார்.அவர் மட்டும் ரஜினி போல் பிரபலங்களுடன் மட்டுமே கூட்டணி என்று சென்றிருந்தால் ,ரஜினிக்கு கடும் போட்டியாக இருந்திருப்பார்.
படம் ஓட வேண்டும் என்பதை மட்டுமே எண்ணிய ரஜினி,சூர்யா படங்கள் நன்றாக ஓடியது -ஓடுகின்றது.தன் இஷ்டம் போல் படம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் விஜயகாந்த் ,விஜய் படங்கள் ஓடவில்லை.இதுதான் முரண்.

Friday 15 June 2012

INSIDOUS --ஆங்கில திகில் பட விமர்சனம்


INSIDOUS --ஆங்கில திகில் பட விமர்சனம் 



நீங்கள் உறக்கத்தில் கனவு காண்கிறீர்கள்.கனவில் எங்கோ தெரியாத இடத்தில மாட்டிகொண்டீர்கள்.மீண்டு வரமுடியவில்லை.கனவு தான் என்பதை உங்கள் மனம் ஏற்க மறுத்து நீங்கள் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கா விட்டால்.அந்த கனவில் இருந்து மீண்டால் தான் நீங்கள் மீண்டும் நம் உலகிற்கு வரமுடியும் என்றால் எப்படி இருக்கும்.

horror -thriller வகை படங்கள் தேடி தேடி பார்ப்பவன் நான்.எக்கச்சக்கமான படங்கள் பார்த்தாகிவிட்டது.அதில் ஓரளவாவது எனக்கு திருப்தி அளித்த படங்களை மட்டுமே உங்களுடன் நான் பகிர்கிறேன்.இந்த படம் "INSIDOUS".என்ன சிறப்பு. இதன் இயக்குனர் தான் "SAW "படத்தின் முதல் பாகத்தை இயக்கி ஒரு பெரிய படத்தின் தொடருக்கு வித்திட்டவர்.இந்த "INSIDOUS" படம் விமர்சகர்களிடம் பெருவாரியாக பாராட்டையும் ,நல்ல வசூலையும்,பல விருதுகளையும் பெற்ற படம்.


ஒரு குடும்பம்.புதிதாக ஒரு வீட்டிற்க்கு குடி வருகிறார்கள்.வந்த சில நாட்களில் அவர்களின் சிறு வயது  மகன் கோமா நிலைக்கு தள்ள படுகிறான்.டாக்டர்கள் அதை கோமா என்று  சொல்லமுடியாது என்றும்,தங்களுக்கே அது புதிதாக இருப்பதாக சொல்கிறார்கள்.வீட்டில் வந்து மூன்று மாதங்களாக கோமாவிலேயே இருக்கிறான்.சில நாட்கள் கழித்து அவன் தாய் சில உருவங்கள் சுற்றி வருவதையும் அதன் குரல்களையும் கவனிக்கிறாள்.அவள் பயந்து தன் கணவனிடம் சொல்லி வேறு வீட்டிற்க்கு செல்கிறார்கள்.அங்கே அந்த உருவங்களின் அட்டகாசங்கள் அதிகரிகின்றன.இந்த அமனுஷிய விசயங்களில் கை தேர்ந்த ஒரு பெண்ணை அழைக்கிறார்கள்.அவர் சிறுவனை பரிசோதித்து,அவன் தூக்கத்தில் கனவு காண்பவன் ,கனவின் போது அவன் மனம் உடலை விட்டு கனவின் போக்கில் நீண்ட தூரம் சென்று சென்றுவிட்டது ,அதனால் தான் அவன் கோமாவில் இருந்து விடுபட முடியாமல் இருக்கிறான்.அவன் உடலில் வேறு சில உயிரற்ற சக்திகள் இறங்க முயற்சிக்கின்றன என்றும் சொல்கிறாள்.
இதிலிருந்து சிறுவனை எப்படி மீது வருகிறார்கள்.அந்த குடும்பம் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள  விரும்புகிறவர்கள் படம் பார்க்கவும்.படத்தின் இறுதி சில காட்சிகள் எனக்கு பிடிக்கவில்லை.படம் ஆரம்பத்திலிருந்தே நம்மை பயமுறுத்துகின்றது.சில காட்சிகள் நம்மை  தூக்கிவாரி போடுகின்றது.இரவில் பார்த்தல் நலம்.நான் இரவில் தான் பார்த்தேன்.அதுவும் இருட்டில்.படம் கொஞ்சம் மெதுவாக செல்லும்.இந்த வகை படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்தான்.

IMDB RATING- 6.8
ROTTEN TOMATOES--68% FRESH

Wednesday 13 June 2012

தடையற தாக்க --சூப்பர் அதிரடி த்ரில்லர் படம்


தடையற தாக்க --சூப்பர்  அதிரடி த்ரில்லர் படம் 

இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு,அதுவும் தமிழில் .பக்கா த்ரில்லர் படம். பர பர அதிரடியும் உண்டு.நிச்சயம் படம் ஸ்பெஷல் தான்.

இரண்டு சகோதரர்கள் வில்லன்கள்.அதில் அண்ணன் யாராலோ செமத்தியாக தாக்கப்பட்டு கோமாவில் இருக்கிறான்.தம்பி தன்  கும்பலுடன் தாக்கியவனை தேடி அலைகிறான்.ஏற்கனவே ஒரு கந்து வட்டி விஷயத்தில் வில்லனுடன்  லேசான உரசல் உள்ள நாயகனின் மீது சந்தேகம்.காரணம் அவரது கால் டாக்ஸியில்  வில்லன் தாக்கப்பட்ட கிரிக்கெட் பேட் கிடைக்கிறது.ஆனால் நாயகன் அவனை தாக்க வில்லை.பல பேர் மீது சந்தேகம் வந்து ஒரு வழியாக யாரும் (படத்தில்)எதிர்பாராத ஒருவர் தான் அதை செய்துள்ளார்.நடுவில் வில்லன் ஆள் ஒருவனே அவனை போட முயற்சிக்கிறான்.
அருண் விஜய் சரியாக பிட் ஆகிறார்.அதுவும் ரொம்பவும் பொங்காமல் அடக்கி உள்வாங்கி நடித்துள்ளார்.நல்ல படங்கள்  கிடைத்தால் நிச்சயம் நன்றாக வருவார்.படத்தை ஒன்ற வைப்பது இரு வில்லன்களும் அவர்களின் நடவடிகைகளும்தான்.சும்மா உருமிகொண்டிருக்காமல் பார்வையாலேயே மிரட்டியிருகிறார்கள்.குறிப்பாக வில்லன் தம்பி குமாராக வரும் வம்சி ,அவனின் அடியாள் சேகராக வரும் அருள் தாஸ்.காமெடி என்று தனியாக இல்லாமல் இயல்பாக கதையோடு வரும் காட்சிகள் படத்திற்கு ஒரு கடின தன்மை தருகின்றது.அதுவும் படத்திற்கு பலம் தான்.

இரண்டே பாடல்கள் அதுவும் முதல் பாதியிலேயே வந்துவிடுகின்றது.காரணம் இரண்டாம் பாதி கதை நடப்பது எல்லாமே ஒரே இரவில்.பின்னணி இசை ஓகே.குறைகள் என்றால் வன்முறை அதிகம்.பெண்களுக்கு பிடிப்பது சந்தேகம்தான்.மற்றவர்கள் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.எல்லாராலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கூட்டம் சுத்தமாக இல்லை.பார்க்க விரும்புகிறவர்கள் உடனடியாக பார்ப்பது நலம்.இல்லாவிட்டால் டீவீடி ,டவுன்லோட் தேடி அலையவேண்டும்.

டிஸ்கி :  நான் பதிவர்  சி.பீ யின் அட்ராசக்க பதிவில் விமர்சனத்தை படம் பார்ப்பதற்குமுன் படித்துவிட்டேன்.அதில் படத்தின் முக்கிய விஷயமான ஒன்றை அவர் எழுதிவிட்டதால்,படம் பார்க்கும்போது எனக்கு அது முன்பே தெரிந்துவிட்டது.விமர்சனம் எழுதுபவர்கள் அதுவும் இதுபோன்ற படங்களுக்கு எழுதும்போது இந்த விஷயங்களை  சொல்லகூடாது.சொல்லிவிட்டால் சப்பென்றாகிவிடும்.copy & paste செய்யும் அவர் இவற்றை  தெரிந்துகொள்ள வேண்டும்.இருந்தாலும் படம் சூப்பர்.

Tuesday 12 June 2012

வழக்கு எண் 18/9 : லேட் தீர்ப்பு :

வழக்கு எண் 18/9 : லேட் தீர்ப்பு  :

         தமிழின் மிக சிறந்த படங்களில் ஒன்று,விகடனில் இந்த ஆண்டு அதிக மார்க் பெற்ற படம்,படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டிவிட்டு செல்கிறார்கள் ,இப்படி இந்த படத்தை பற்றி அதிகபடியான தகவல்கள்.ஆனால் எனக்கு  இந்த படம் பார்க்க நேரம் இல்லை.படத்தை பற்றி நல்ல விதமாய் கேள்விப்பட்டதால்,அவசரபடாமல் பொறுமையாய் ரசித்து பார்க்க வேண்டும் என்று இருந்தேன்.சில நாட்களுக்கு முன் பார்த்தே விட்டேன்.


கதையை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்,அதனால் அதை பற்றி இங்கே தேவை இல்லை.சொல்ல வந்ததை இயக்குனர் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.நாயகனின் ஆரம்ப கிராமத்து காட்சிகள் இந்த படத்தை உடைத்து விடுகின்றது.திணிக்கப்பட்ட சோகம் .தொடர்ந்து வரும் பிளாட்பார கடை காட்சிகளும்,ஒப்பனை இல்லாத நாயகனின் முகத்தை பரிதாபத்தை நம் மனதில் ஏற்ற பாடுபட்டுள்ளார் இயக்குனர்.இறுதி காட்சியும் எதாவது அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்று வலிய திணிக்க பட்டுள்ளது.


படத்தின் மிக பெரிய மைனஸ் இசை.குறிப்பாக பின்னணி இசை. உலகம் படம் என்று சொல்பவர்கள் ,அதை கவனிக்கவில்லையா.எண்பதுகளின் வந்த படங்களில் வந்த சோக காட்சிகளுக்கு வரும் பின்னணி இசை.இரைச்சல்.

முடிவாக ,நல்ல படம் தான்,ஆனால் மிகையாக கொண்டாட்ட பட்டதால்,அதன் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும்.சில காட்சிகள் தவிர பார்த்தல் நல்ல படம். உலக படம்,இதுவரை வராத படம்,புரட்டி போட வந்த படம் இதெல்லாம் ரொம்ப ஓவர்தான் .

சரி அதென்ன பணக்காரர்கள் எல்லாம் கெட்டவர்கள்,சுயனலமிக்கவர்கள் , ஏழைகள் எல்லாம் நல்லவர்கள்,சுயநலம் இல்லாதவர்கள்?


Friday 8 June 2012

தமிழ் சினிமா-90's வரலாறு


                                                தமிழ் சினிமா-90's வரலாறு




தமிழ் சினிமா 90 களில், எதில் இருந்து தொடங்குவது? படங்களில் இருந்தா? அல்லது கதாநாயகர்களில் இருந்தா? சரி அதை விட்டுவிடுவோம். 80 களின் இறுதி அக்னி நட்சத்திரம் ,அபூர்வ சகோதரர்கள்,குரு சிஷ்யன் ,கரகாட்டக்காரன்,மாப்பிள்ளை,புதிய பாதை,ராஜாதி ராஜா ,புது புது அர்த்தங்கள்,வருஷம் 16  என்று   ரஜினி கமல் படங்களும் சில எதிர்பாராத படங்களும் வெற்றி அடைந்தன.மிகவும் எதிர்பார்க்க பட்ட தர்மத்தின் தலைவன்,கொடி பறக்குது,சத்யா,உன்னால் முடியும் தம்பி,சிவா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தன.


சரி 90 க்கு வருவோம்.
இந்த 90 களுக்கு வரும்போது,மணிரத்னம் ஒரு ஹிட் இயக்குனராகவும் பாலச்சந்தர் போராடிக்கொண்டும் இருந்தனர்.பாலச்சந்தருக்கு ஜான் ஏறினால் முழம் சறுக்கும் அளவுக்கு கஷ்டப்பட்டு ஒரு ஹிட் கொடுத்தால் பின்னர் சில தோல்விகள் தொடர்ந்து வந்தது.பாரதிராஜா ஏற்கனவே 80 கள் இறுதியில் என் உயிர் தோழன்,கொடி பறக்குது, மூலம் ஏகத்துக்கு சறுக்கி இருந்தார்.இப்போது மீண்டும் புது நெல்லு புது நாத்து மூலம் தோல்வி.ராம நாராயணன்,மணிவண்ணன்,விசு,கங்கை அமரன் போன்றவர்கள் சரமாரியாக படங்கள் எடுத்து தள்ளினார்கள் .ராமராஜன்,பாண்டியராஜன்,சத்யராஜ், போன்றவர்கள் மினிமம் கேரண்டி ஹீரோவாக வளம் வந்து கொண்டிருத்த நேரம். P .வாசு,R .K .செல்வமணி ,கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்களின் தொடக்க காலம்.சொல்லவே வேண்டியது இல்லை ரஜினி ,கமல் , இளையராஜா போன்றவர்களின் உச்ச நேரம்.

1990 -1995 :
 90 இன் தொடக்கத்தில் ரஜினியா கமலா என்றால் ஜெயித்தது கமலே.ரஜினிக்கு அதிசயபிறவி,பணக்காரன் போன்று பிளாப்,சுமாரான படங்களே.அனால் கமலோ மைக்கல்,மதன,காமராஜன் ஹிட் மூலம் நின்றார்.

அடுத்த ஆண்டும் அதாவது 1991 உம் ரஜினி,கமல் இருவருக்கும்  சுமாரே.தளபதி,தர்மதுரை ,நாட்டுக்கு ஒரு நல்லவன் இதில் தளபதி மட்டும் தப்பித்தது.கமலுக்கு குணா தளபதியோடு மோதி வீழ்ந்தது.இந்த ஆண்டின் ஆச்சர்யம் சின்ன தம்பி மற்றும் கேப்டன் பிரபாகரன் ஹிட் ஆனது.சின்ன தம்பி தான் ஆண்டின் அதிக வசூல் ( 7 கோடி) செய்த படம்.




92 இல்  ரஜினி  மன்னன் என்ற சுமாரான  ஹிட்டோடு தொடங்கினார்.அண்ணாமலை மூலம் சிக்ஸர் அடித்துவிட்டார் .பாண்டியன் சொதப்பியது.கமலுக்கு சிங்காரவேலன் சறுக்கினாலும் தேவர் மகன் கம்பீரமாக எழுந்து நின்றது.மற்ற ஹிட் படங்கள் என்றால் செம்பருத்தி ,சின்ன கௌண்டர்,சூரியன்,வானமே எல்லை. குறிப்பிட தக்க படம் ரோஜா.அறிமுகம் நம்ம ரகுமான்.அதோடு நம்ம இளைய தளபதி விஜய் இந்த ஆண்டுதான் அறிமுகம் ஆனார்.


1993 இல் நம்ம அஜித் அறிமுகம் ஆகிறார்.இந்த ஆண்டு ரஜினி ,கமல் இருவருக்கும் சிறப்பாக இல்லை.எஜமான்,உழைப்பாளி இரண்டும் ஓகே என்ற அளவில் தான் ஓடின.இந்த ஆண்டும் சூப்பர் ஹிட் படமாக ஸ்டார் யாரும் இல்லாத கிழக்கு சீமையிலே,gentleman ஓடியது.கமல் கலைஞன் என்று பேர் எடுத்தார்.வால்ட்டர் வெற்றிவேல் நன்றாக ஓடியது.93  சருக்கிவிட்டதால் 94 இல்  ரஜினி வீராவோடு நிறுத்திவிட்டார்.கமல் மகாநதி என்ற காவியத்தை எடுத்தார்.ஓடவில்லை.விட்டேனா பார் என்று நம்மவர் எடுத்தார்.மகளிர் மட்டும் தயாரித்தார்.ஊஹும்.செல்ப் எடுக்கவில்லை.அமைதிப்படை ,நாட்டாமை,காதலன்,ஜெயஹிந்த் ஆகியவை ஹிட்.

1995 முக்கியமான ஆண்டு.
ரஜினி பாட்ஷா மூலம் உச்சத்தை அடைந்த ஆண்டு.அப்பவே ஐம்பது கோடி வரை வசூல் .இந்த ஹிட் மூலம் அதை தக்க வைக்க சென்ற ஆண்டு ஹிட் ஆன நாட்டாமையின் டைரக்டர்     யும் காதலன் இசை அமைபாளறையும் தன்னோடு இணைத்து  முத்து எடுத்தார்.பாட்ஷா அளவுக்கு இல்லை என்றாலும் ஹிட் தான்.கமல் பாவம் குருதிபுனல் என்ற வித்யாசமான படம் எடுத்தார்.ஓடிவிடுமா என்ன.பம்பாய் மூலம் இந்தியா எங்கும் மணிரத்னம் பேசப்பட்டார்.அஜித் ஆசை என்ற ஹிட் கணக்கை தொடங்கியதும் இந்த ஆண்டு தான்.


1990 முதல் 1995 வரை  ஏற்றம் என்று பார்த்தால் ரஜினி ,எ.ஆர்.ரகுமான்,ஷங்கர்,மணிரத்னம்,ரவிக்குமார் ஆகியோர் குறிபிடத்தக்க ஏற்றம் கண்டனர்.இறக்கம் என்றால் கமல்,இளையராஜா,ஆகியோர் இறக்கம் கண்டனர். ராமராஜன்,டி.ராஜேந்தர் ஆகியோர் பீல்ட் அவுட் ஆனர .சரி என்னதான் கமலை ரஜினி முந்திவிடாலும் கமலை பார்த்து சில விஷயங்கள் செய்துபார்க்க தொடங்கினார்.கமல் தேவர் மகன் ஹிட் ஆனதும்,கமல் கதை,திரைகதை,வசனம், பின்னல் இருந்து படத்தை இயக்குவது போன்ற வேலைகள் மூலம் பேர் பெற்றார்.ரஜினிக்கும் அப்படியொரு ஆசை வந்தது. வள்ளி என்ற படம் மூலம் அதை செய்து பார்த்தார்.தனக்கு அதெல்லாம் வராது என்று விட்டு விட்டார்.

பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய விஜயகாந்த் தொடர்ந்து அறிமுக பிலிம் இன்ஸ்டிடுட்  மாணவர்களுக்கு வாய்ப்பு தந்து சரியான படங்களை தேர்வு செய்ய தவறி விட்டார்.அவர் மட்டும் புதிவர்களுக்கு வாய்ப்பு தராமல் ரஜினி போல் ஹிட் கூட்டணி அமைத்ருந்தால் வேறு மாதிரி ஆகியிருக்கும்.

இந்த ஆண்டுகளில் பொதுவான ஒருவர் கவுண்டமணி. நாயகிகளில் குஷ்பூ உச்சம் பெற்றனர்.

சரி பதிவு ரொம்பவும் பெரிதாக போய்கொண்டே இருக்கிறது.
1996 -2000  வரை அடுத்த பதிவில் சந்திபோம்.


தொடரும்





Wednesday 6 June 2012

கமலின் காமெடி படங்கள் :


கமலின் காமெடி படங்கள் :

கமலையும் காமெடியையும் பிரிக்க முடியாது.அவருக்கு காமெடி வரும் என்பது கல்யாணராமன் காலம் தொட்டு தெரியும் .இருந்தாலும் முழுநீள காமெடி படம் இல்லாமல் இருந்தது.அபூர்வ சகோதரர்கள் படத்தில் உயரமான கமல் காமெடி செய்திருப்பார்.கடைசி காட்சி வரை குள்ள கமல் செய்யும் கொலைகளின் சீரியஸ் தெரியாமல் அவர் பாட்டுக்கு ஜனகராஜ்,புலி வேஷம் என்று கலக்கி  இருப்பார்.அவரின் முதல் முழுநீள காமெடி என்றால் மைக்கேல்,மதன,காமராஜன் .அது முதல் அவ்வபோது சில காமெடி படங்களில் நடித்து வந்தார்.ஒரு நேரம் கடுமையான ஒப்பனைகளோடு மிகுந்த சிரத்தையோடு ஒரு படம் நடித்தால் அடுத்து ரிலாக்ஸ் ஆக ஒரு காமெடி படம் என்று நடித்து வந்தார்.

மைக்கேல்,மதன,காமராஜன்:
                                                 தமிழில் சிறந்த காமெடி படங்களில் இந்த படத்திற்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.நான்கு கமலுக்கும் வித்யாசம் காட்டியிருப்பார்.ஏன் குரலில் கூட மைகேல் கர கர குரலிலும்,மதன் ஆங்கில உச்சரிப்பிலும்,காமேஸ்வரன் மலையாள தமிழிலும் ,ராஜு சென்னை தமிழிலும் கலக்கி இருப்பார்.இந்த படத்தை சில நாட்கள் எடுத்து பார்த்ததில் கமலுக்கு திருப்தி இல்லை.பின் பஞ்சு அருணாசலம் வந்து மொத்தமாக மாற்றினார்.கமலே இந்த பட தயாரிப்பு.இந்த படத்தில் எல்லாமே லைட் ஆக தான் இருக்கும். வில்லன் கூட ரொம்ப கொடூரம் எல்லாம் இல்லை.கிளைமாக்ஸ் மலை வீடு அந்த நேரத்தில் (1990) ஆச்சர்யம்.சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்தி படம் "welcome".அதில் இந்த கிளைமாக்ஸ் மட்டும் அப்படியே தமிழில் இருந்து  உருவி இருப்பார்கள்.


சிங்காரவேலன்:

                           இளையராஜாவுக்கும் கமலுக்கும் நல்ல புரிதல்.இன்றைக்கும் இசை என்றால் கமலுக்கு  முதலில் ராஜாதான்.இளையராஜா சில சொந்த படங்கள் தயாரித்தார்.ரஜினி தன் பங்கிற்கு அவருக்கு ராஜாதி ராஜா நடித்து கொடுத்தார்.கமல் சிங்காரவேலன் நடித்தார்.கிராமத்தில் தொடங்கும் படம்,அதில் அம்மா கண்ணீருடன்  பிளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்தவுடன் இவராக தன் அப்பாவை நாலு பேர் கொன்று விட்ட தாக நினைத்து கமல் பொங்குவார்.இன்று "spoof" என்று சொல்லும் விஷயத்தை அன்றே முயன்று இருப்பார்கள். படம் பெரிய ஹிட் எல்லாம் இல்லை. காரணம் காமெடி என்ற பேரில் சில நேரத்தில் மொக்கை.கமலே இந்த படத்தை குப்பை என்று ஒரு தடவை சொன்னார்.



சதிலீலாவதி :

                     பாலு மகேந்திரா அவருடைய விருப்பமான ரெண்டு பொண்டாட்டி படம்.தமிழில் அதிகம் ரெண்டு பொண்டாட்டி படத்தை எடுத்தவர் என்ற பெருமை பெற்றவர்.அதே போல் ரெண்டு பொண்டாட்டி காரனாக அதிகம் நடித்தவர் சிவகுமார்.கமலுக்கு இந்த படத்தில் நீட்டிக்கபட்ட கௌரவ வேடம்.அவரே தயாரிப்பு.கோவை சரளாவை தனக்கு ஜோடியாக்கி திரையுலகை அதிரவைத்தார்.வசூல் குறையில்லை.படம் ஹிந்தி,கன்னடம் ரீமேக் என்று ரவுண்டு வந்தது.

அவ்வை ஷண்முகி :

                               கமலுக்கு ஆங்கில படங்களை அப்படியே தமிழில்  நடிக்கும் ஆர்வம் ,ரீமேக் படங்களில் இல்லை. ரொம்பவும் கவர்ந்தால் தவிர ரீமேக் நடிக்க மாட்டார்.இந்த படம் "mrs.doubtfire" என்ற ஆங்கில படத்தின் நீட்சி.அதற்கு முன் தமிழ் கதா நாயகர்கள் சில காட்சிகளில் பெண் வேடமிட்டு நடித்ததுண்டு.ஆனால் ஏறக்குறைய படம் முழுவதும் பெண்ணாக வருவார்.அதற்க்கு மேக்கப் போடா நாலு மணி நேரம் ஆகும்.ஜெமினி கணேசன் வேடத்திற்கு சிவாஜியை கேட்டார்கள்.அவர் கமலிடம் "என்னடா கதை விடுகிறீர்கள ? ஒரு ஆணுக்கு எதிரில் ஒருவன் பெண் வேடத்தில் இருந்தால் கண்டு பிடிக்க முடியாதா? நான் நடித்தால் சரி வராது என்று மறுத்து விட்டார்.பிறகு ஜெமினி வந்தார்.படம் வந்த பின் ஆன்மீக அமைப்புக்கள் படத்தை கண்டித்தன.உண்மையில் பிராமணர்கள் அதிகம் உள்ள இடங்களில் படம் சக்கை போடு போட்டது.


காதலா காதலா:

          கே.எஸ்.ரவிகுமார் இயக்க வேண்டிய படம்.அந்த நேர பெப்சி சண்டையால் விலகினார்.அதே ஆள் மாறாட்ட கதை தான்.கூட பிரபுதேவா ,திக்குவாய் என்று படம் முடிவதற்குள் ஒரு வழி ஆகிவிடும்.ஒரு காமெடி படம் மெதுவாக சென்றால் என்ன ஆகும்.அதே தான்.



தெனாலி:
          ஹேராம் தோல்விக்கு பின் கமல் கே.எஸ் .ரவிகுமரையே தயாரிப்பாளராக ஆக்கினார்.படையப்பா ஹிட் தெம்பில் இருந்த  ரவிகுமார்    எ.ஆர்.ரகுமான்,கிரேசி மோகன்  என்று கூட்டணி.முதலில் மோகன்லால்,சிம்ரன் என்ற இடத்திற்கு ஜெயராம்,ஜோதிகா வந்தனர்.இலங்கை தமிழ் பேசி நடித்த இந்த படம் கமலின் மார்கெட்டை தூக்கி நிறுத்தியது.


பம்மல் கே.சம்மந்தம் :

               அதே போல் ஆளவந்தான் தோல்விக்கு பிறகு பம்மல் சம்மந்தம்.மௌலியும் கமலும் பால்ய நண்பர்கள்.அவரது இயக்கத்தில் ஒரு படம் என்று பல வருட ஒப்பந்தம்.இதிலும் சென்னை தமிழ்.ஸ்டான்ட் பார்ட்டி ,பிரம்மச்சாரி என்று சில விஷயங்கள்.படம் ஓரளவு ஓடியது.டிவி யில் மாதம் ஒரு முறையாவது ஓடுகிறது.சிம்ரனுடன் பழக ஆரம்பம்.



பஞ்சதந்திரம்:

            இதிலும் ரவிகுமார்.உடன் ஜெயராம்,யூகி சேது, ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன்.கதை ? அடபோங்க ! இந்த பட நேரத்தில் கமல் சிம்ரனோடு நெருக்கம்.கமல் வீட்டில் பிரச்சனை.வீட்டில் பிரச்சனை வைத்துகொண்டு காமெடி படத்தில் நடிக்க நேர்ந்தால்? படம் வந்த போது ரசிக்கபட்டதை விட இன்றும் டிவியில் ரசிக்க படகிறது. இந்த படம் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது.உண்மையா?

வசூல் ராஜா:

     ஹிந்தி முன்னா பாய் .ரொம்ப நாள் கமலிடம் நடிக்க கேட்டு அவர் மறுத்து வந்த படம்.காரணம் ஹீரோ கல்லூரி படிப்பவன்.நாற்பது வயதிற்கு மேல்  அப்படி நடித்து சிவாஜி பேர் ரிப்பேர் ஆனதை கமல் அறிந்திருந்தார்.ஒரு வழியாக சரண் அந்த படத்தில் உள்ள நல்ல விஷயங்களை சொல்லி கமலை ஒப்புகொள்ள செய்தார்.படத்தில் ஒரு நோயாளி வருவார்,கடைசியில் இறந்து விடுவார்.அந்த வேடத்திற்கு தனுஷ் நடிக்க சொல்லி கேட்க பட அவர் ஓட்டமெடுத்தார்.அந்த நேரத்தில் படம் ஹிட் தான்.ஆனால் டிவியில் மெகா ஹிட்.

         இறுதியாக மும்பை எக்ஸ்பிரஸ் .அதை பற்றி சொல்ல வேண்டாம்.அதற்க்கு பின் அவர் காமெடி படம் எதுவும் நடிக்கவில்லை.தசாவதார "பல்ராம் நாய்டு " இருந்தாலும் பத்தவில்லை.நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் கமல் மீண்டும் காமெடிக்கு திரும்பி திரை அதிர செய்ய வேண்டும்.

பதிவை படிபவர்கள் அநேகம் பேர் கமெண்ட் போடுவதிலை .
கமெண்ட் போட்டால் எனக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்.