தமிழ் இசை அமைப்பாளர்களில் நம்பர் 1 யார் ? :
தமிழ் திரை படங்களில் ஏன் இந்திய திரை படங்களில் பாடல்கள் தவிர்க்க முடியாதவை.என்ன தான் பாடல்கள் இல்லாமல் அவ்வபோது படங்கள் வந்தாலும் அவை வருடத்திற்கு மிக சொற்ப படங்களே.இதுவரை தமிழ் சினிமா பல இசை அமைப்பாளர்களை அடையாளம் காட்டி உள்ளது.
இதில் நான் கேட்டவரை (கேட்க்க தொடங்கியது முதல்) கே.வி.மகாதேவன்,எம்.எஸ்.விஸ்வநாதன் ,இளையராஜா ,ரஹ்மான் என குறிப்பிடத்தகுந்த,அதாவது அவர்களுக்கென ஒரு ஸ்டைல்,அதுவரை இருந்ததை புரட்டி போட்ட எனும் சொல்லும்படி இருந்தவர்கள்.இவர்களை பற்றி நான் அறிந்தவற்றை அவர்களின் இசை பற்றி ஒரு பதிவு எழுத ரொம்ப நாளாக எண்ணம்.ஒரு இசைஅமைப்பாளர் வெற்றிகரமான இசைஅமைப்பாளர் என்று எப்படி சொல்வது.அருமையாய் இசைஅமைத்த பலர் அடுத்த படம் இல்லாமல் போன வரலாறுகள் இங்கு உண்டு.
கே.வி.மகாதேவன் : திரை உலகினரால் மாமா என்று அன்போடு அழைக்க பட்டவர்.ஒரு பாடல் இன்ன ராகத்தில் என்றால் அட்சரம் பிழறாமல் இவர் இசையில் இருக்கும்.நமது சாஸ்திர சங்கீதம் இவர் இசையில் அதிகம் வெளிப்படும்.தில்லான மோகனாம்பாள்,திருவிளையாடல் என்று இவர் பேர் சொல்லும்படங்கள் உண்டு. குறிப்பாக சங்கராபரணம் ஒரு மைல்கல் .தெலுங்கிலும் இவர் முன்னினி இசை அமைப்பாளராக இருந்தார் .தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு பெரும்பாலும் இவர் இசைதான்.ஜெயலலிதாவையே பாட வைத்துள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் : ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர், இரட்டையர்களாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்று இருந்து ஆயிரத்தில் ஒருவனோடு பிரிந்தார்கள் .தனி தனியாக இசை அமைத்தார்கள் .அதில் இவர் இசை மட்டுமே எடுபட்டது .இசை தவிர வேறு எதை பற்றியும் அதிகம் தெரிந்து இராதவர் .ஜனரஞ்சகமான இசை அமைக்க தெரிந்தவர் .இசை கருவிகள் அதிகம் இல்லாமல் வரிகளுக்கு முக்கியத்துவம் தந்து இசை அமைத்தார் .பின்னாளில் பரத்வாஜ் இவர் பாணியையே கடைபிடித்தார்.எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் விஸ்வநாதன் தான் .அவரின் அதிக படங்களுக்கு இசை அமைத்தவர்.இவர் திறமை அதிகம் வெளிப்பட்டது ஸ்ரீதர் ,பாலச்சந்தர் போன்றவர் படங்களில் தான்.இவர் படம் முழு ஆல்பமாக நான் அதிகம் முறை கேட்டது உலகம் சுற்றும் வாலிபன் .பின் 70 களில் இளையராஜா வருகைக்கு பின் ராஜாவை போட்டியாக நினைத்து கடைசியாக முழுதும் அசாத்திய படம் என்றால் நினைத்தாலே இனிக்கும் தான்.அதன் பின் ராஜாவோடு சேர்ந்து சில படங்களில் இசை அமைத்தார்.நடிக்கவும் செய்தார் .கண்ணதாசனின் நெருங்கிய நண்பர்.60கல் மற்றும் 70 முதல் பாதி வரை தமிழ் திரை இசை என்றால் இவர்தான்.

இளையராஜா : MY RAJA. YES.இப்படி ஒருவர் வந்திருக்காவிட்டால் ? 70களில் ஒரு மோகம் தமிழ்நாட்டில் இருந்தது .அது ஹிந்தி பாடல்கள் .மொழி புரியாவிட்டாலும் தம் மேரா தம்,ரூப்பு தேற மஸ்தான என்று ஹிந்தி பாடல்கள் கிராமங்கள் வரை சென்று இருந்தது.அதை திருப்பி தமிழ் பாடல்களை மீண்டும் கேட்க்க செய்தவர் ராஜா .பின்னணி இசை என்பது காட்சிகளை நிரப்பும் இசை என்று அதுவரை இந்திய திரை உலகமே நினைத்திருந்த நேரத்தில் அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து பின்னிணி இசை பற்றியும் மக்களை பேசவைத்தவர்.ஒரு இசை அமைப்பளரால் படம் விற்பனை ஆகுமா ? இவரால் ஆனது.இவர் முகத்தை போஸ்டரில் பெரிதாக போட்டு மக்களை இழுத்த படங்கள் ஏராளம் .மோகன்,ராமராஜன் ,முரளி என்று இவரால் சினிமா வாழ்வு பெற்றவர்கள் .இன்று அதுபோல் எதாவது நடிகருக்கு வாழ்வு அளித்த இசை அமைப்பாளரை கை காட்ட முடியுமா? கிராமத்து படமோ,நகரத்து படமோ ,சிந்து பைரவி ,சலங்கை ஒலி போல் கர்நாடக சங்கீத அடிப்படையாக கொண்ட படமோ ,அல்லது நவீன டிஸ்கோ ,வெஸ்டேர்ன் பாடலோ இவரால் முடியாதது எதுவுமே இல்லை.ஒரு இசை அமைப்பாளர் ஒரு ஆண்டுக்கு எத்தனை படங்களுக்கு இசை அமைக்க முடியும் ? 10 அதிகபட்சம் 20 .
ராஜா
1978- 24 படங்கள்
1979-30, படங்கள்
1980-34 படங்கள்
1981-33
1982-33
1983-46
1984-54
1985-51
1986-50
1987-32
1988-44
1989-43
1990-46
1991-41
1992-55
1993-43
அந்த 80-90 காலங்களில் வருடத்திற்கு 70 படம் வந்தால் 50-60 படம் இளையராஜா தான்.போட்டிக்கு யாரும் இல்லை .சக இசை அமைப்பளர்கள் இவர் கிட்டே கூட நெருங்க முடியாத தரம்.அதுவும் இசை அமைக்கும் வேகம் மலைக்க வைக்கும் இந்தியாவில் வேறந்த இசை அமைப்பாளரிடமும் காண முடியாத வேகம்+தரம்.இன்றுள்ள இசை அமைப்பளர்கள் என்ன பின்னிணி இசை அமைக்கிறார்கள்? ராஜாவின் பல படங்களில் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்தும்.சேது படம் எல்லாம் வேறு ஒரு இசை அமைப்பாளரை நினைக்க முடியுமா? காதலுக்கு மரியாதை பின்னணி இசை இன்னும் கூட காதிலேயே இருக்கிறது.இன்றும் கூட இவர் இசை பிடிக்காத தமிழர்கள் குறைவு.டாஸ்மாக் தமிழர்கள் இவர் இசைக்கு அடிமைகள் .குறை என்றால் யாருடனும் விட்டு கொடுத்து போகாததால்,நிறைய திரை உலக நண்பர்களை இழந்து இருக்கிறார்.முக்கியமாக பல இயக்குனர்களின் நட்பை.ஆனாலும் இசை உலகில் எல்லோரும் விரும்பும் ஒருவர் என்றால் கோரஸாக ராஜா என்றே பதில் வரும்.சமீபத்தில் நீதானே என் பொன்வசந்தம் .எனக்கு மீண்டும் 80-90களின் இசை போய் வந்த நிறைவு.இன்றைய அதிரும் இசை ,டெக்னோ கேட்டு பழகியவர்கள் இளையராஜா படத்தை கெடுத்து விட்டதாக குறை பட்டுகொள்கிறார்கள் .பின் 70களில் தொடங்கி 80களின் தொடக்கத்தில் உச்சம் போய் நடு 90கல் வரை தமிழ் திரை இசை என்றால் இளையராஜா தான் .இதுவரை 892 படங்களுக்கு இசை அமைத்துள்ளார் .
ஏ.ஆர் ரகுமான் : இளையராஜா ஹிந்தி பாடல்கள் கேட்டுகொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திரும்ப வைத்தார் என்றால்,ஹிந்தி பாடல் கேட்டுகொண்டிருந்த வட இந்தியர்களையும் தமிழ் பாடல் கேட்க்க வைத்தவர் ரகுமான்.முதலில் ரோஜா கேட்டுவிட்டு "ONE FILM WONDER" என்று இவரை நினைத்தேன்.அதுவரை இருந்த ஆடியோ மார்க்கெட்டை விரிவு படுத்தியவர்.புதிய இசையை ,சப்தங்களை ,கருவிகளை அறிமுக படுத்தியவர்.ஒரு பேட்டியில் அவரிடம் பணிபுரிந்தவர் சொன்னது.ஒரு படத்தில் ஒரு ரிதம் ஒலிக்காக மின்போர்டில் வரும் ஐ.சி க்களை வெடிக்க செய்து அந்த ஒலியை மிக்ஸ் செய்தோம் என்று கூறினார்.இவர் அளவிற்கு புதிய பாடகர்களை அறிமுகம் செய்து வைத்தவர்கள் இருக்க முடியாது.ஆனாலும் அதுவே ஒரு குறையும் .யாரும் ரொம்ப பெரிய அளவில் பிரகாசிக்க வில்லை (ஓரிருவர் தவிர ).இவர் பாடல்களை கேட்பது ஒரு கலை.முதல் முறை கேக்கும்போது ஒன்றும் பிடிபடாது.ஒரு பாடல் மனதில் நிற்க குறைந்த பட்சம் 5 முறையாவது கேட்டால்தான் பிடிக்க ஆரம்பிக்கும்.இவர் இசை அமைக்கும் முறை அருமையானது.பாடகரை வைத்து பல முறைகளில் பாடவைத்து பதிவு செய்து,அதில் சிறந்தவற்றை எடுத்து சேர்த்து அதற்க்கு ஓவ்வொரு இசைகோர்வையாக சேர்த்து ,பிரித்து அதை கடைசிவரை பலகட்ட அலசல்கள் செய்து இறுதியில் ஒரு முழுமையான பாடலாக வந்திருக்கும்.பாடலை பாடிய பாடகர்களுக்கே அது இப்படிதான் வந்திருக்கும் என்று ஆடியோ வெளியாகி கேட்ட்கும்வரை தெரியாது.குறை என்றால் படதேர்வு.ரொம்பவும் மோசமான படங்களுக்கு அதிகம் இசை அமைத்து உள்ளார்.HIT FILMS RATIO ரொம்பவும் குறைவு .இதுவரை 59 நேரடி தமிழ் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.அதில் வெறும் 19 படங்களே ஹிட்.பாதிக்கும் குறைவு.

இன்று யுவன் சங்கர் ராஜா,ஹாரிஸ் ஜெயராஜ்,ஜி.வி.பிரகாஷ்,தமன் ,விஜய் ஆண்டனி என்று பல புதியவர்கள் கலக்க தொடங்கிவிட்டனர்.மீண்டும் இப்போது இவர்களில் தற்சமயம் ஹிட் இசை அமைப்பாளர் யார் என்பதே கேள்வி.பாஸ்ட் புட் போல் இன்றைய இசை மாறிவிட்டாலும் அதில் பல பாடல்கள் இன்று உயிரற்றவை ஆக இருக்கின்றது.காரணம் காலத்தை தாண்டிய பாடல்கள் என்று இன்று வரும் பாடல்கள் இல்லை.படம் வெளிவரும் முன் 1 மாதம் ,வந்த பின் 1 மாதம் .அவ்வளவுதான் இன்றைய பாடல்களின் காலம்.மேலும் யுவன் வெகு சில படங்கள் தவிர மற்ற இசை அமைப்பளர்கள் பின்னணி இசை என்றால் என்ன கேட்பார்கள் போல் உள்ளது .பாடலில் போட்ட டயுனையே கொஞ்சம் அங்கே இங்கே சில சேர்த்து படத்தில் நிரப்பி விடுகிறார்கள்.இதுவா பின்னணி இசை என்பது?இந்த குறை ஏ .ஆர் ரகுமான் படங்களில் கூட உண்டு.பெரும்பாலும் பாட்டு டயுனையே பின்னணி இசைக்கும் பயன் படுத்துவார்.
சரி இசை அமைத்த படங்களின் ஹிட்,இன்றைய மார்க்கெட்,கையில் உள்ள படங்கள் போன்ற விஷயங்களை கணக்கிட்டால் இன்றைய ஹிட் இசை அமைப்பாளர் யார் என்று பார்த்தல் கொஞ்சம் ஆச்சர்யமாக உள்ளது.காரணம் அது ஹாரிஸ் ஜெயராஜ்.ஆமாம்.அந்த இடத்திற்கு அவர் தகுதி ஆனவரா என்றால் ஒரு இசை ரசிகனாக நிச்சயம் என் தேர்வு அவர் இல்லை.இருந்தாலும் இதுவரை 31 தமிழ் படங்களில் இசை அமைத்து உள்ளார்.அதில் 18 படங்கள் சூப்பர் ஹிட்.அவரது பட தேர்வு எப்படி என்றால் பெரிய இயக்குனர் ,பெரிய பேனர் ,ஹிட் ஹீரோ,பெரிய சம்பளம் என்று சகல விஷயங்களும் ஓரளவு ஓகே என்றால் மட்டுமே படங்களை ஓகே செய்கிறார்.எனக்கு தெரிந்து ஒரு 10 TUNE வைத்திருக்கிறார்.அதையே இப்படி கொஞ்சம் மாற்றி அப்படி கொஞ்சம் மாற்றி என வண்டி ஓடிகொண்டிருக்கிறது .பின்னணி இசை பற்றி சொல்லவே வேண்டாம்.ஆனாலும் இன்று இவர்தான் நம்பர் 1 .இது தான் நிதர்சனம்.